உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தொடக்க விழா நாளை கலை நிகழ்ச்சிகளுடன் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. கலை நிகழ்ச்சியில் தமன்னா, ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அறிவிக்கப்ட்டிருந்தது.
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நாளை மறுதினம் ஆரம்பம் ஆகவுள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. நாளை மறுதினம் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
உலகக்கோப்பை தொடர் ஆரம்பம் ஆகுவதை முன்னிட்டு பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள் நாளை அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் ரன்வீர் சிங், தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். இரவு 7 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் என்று முன்னர் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு பதிலாக இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சுக்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சியையும், உலகக்கோப்பை தொடர் முடிவின்போது ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

