2036-ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நிடா அம்பானியின் தொடர் முயற்சியால், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மும்பை நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் சுமார் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனை சர்வதேச விளையாட்டு உலகமே உற்று கவனித்து வருகிறது. இந்த கூட்டத்தில் 2036 இல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியபோது, 2029 ஆம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா விரும்புகிறது. உலகின் மிகப்பெரும் விளையாட்டு நிகழ்ச்சியான ஒலிம்பிக் போட்டிகளை 2036 ஆம் ஆண்டு நடத்தவும் இந்தியா விரும்புகிறது. இது 140 கோடி இந்தியர்களின் கனவு. இதனை நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம். இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.