இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

அரசியல் இந்திய வணிகம் இந்தியா இலங்கை உலகம் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏப்ரல் 6 ஆம் தேதி இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படி, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம், பாதுகாப்புத் துறையில் பயிற்சித் திட்டங்கள் மற்றும் சில உபகரணங்களைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்களை இரு தரப்பும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு பற்றி மோடி வருகையின்போது ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை இல்லையென தெரிவித்துள்ளது இலங்கை வெளியுறவுத் துறை.
கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கை ஒருபோதும் விட்டுத்தராது எனவும், ஆனால், ராஜாங்க ரீதியில் இருநாடுகளுக்கும் பொதுவான பயன்பாட்டிற்காக இலங்கை ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் நியூஸ் 18 இடம் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *