இந்தியாவுடனான கனடாவின் மோதல் போக்கு காரணமாக இந்தியா வருபவர்களுக்கான விசா சேவை ரத்து செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று மீண்டும் இந்த சேவையை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஜூன் 8ம் தேதி சுட்டு கொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது.
தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப்பின் லூதியானா நகரில் 6 பேர் கொலைக்கு காரணமான வெடிகுண்டு தாக்குதலிலும் இவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். நாடு முழுவதும் போலீசாரும், புலனாய்வு அமைப்புகளும் இவரை தீவிரமாக தேடினர். அப்போதுதான் இவர் கனடாவில் குடியேறினார் என்ற விவரம் தெரியவந்தது. சிறிது நாட்களிலேயே இவருக்கு கனடா குடியுரிமையும் கிடைத்து விட்டது. ஆனாலும் இவரை, தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என கனடாவுக்கு பஞ்சாப் போலீசார் கோரிக்கை வைத்தனர். கனடா கண்டு கொள்ளவில்லை. இது நிஜ்ஜாருக்கு சாதகமாக அமைந்தது. அதனால் மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கினார்.
இந்த நிலையில்தான், தங்கள் நாட்டுக்கு எதிராகவும், அதே நேரத்தில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என களத்தில் இறங்கியது இந்தியா. இதுபற்றி இந்தியா கேட்க, கனடா மவுனம் சாதித்தது. இந்நிலையில்தான் எதிர்பாராத விதமாக கனடாவிலேயே அடையாளம் தெரியாத நபர்களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இதுகுறித்து கனடா உளவுத்துறை விசாரணையில் இறங்கியபோது, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார்.
அதே நேரத்தில் கனடாவிலிருந்து இந்திய தூதர் ஒருவரையும் அவரது அரசு வெளியேற்றியது. இதனால் பதிலுக்கு கனடாவின் தூதரக உயரதிகாரி ஒருவரையும் இங்கிருந்து இந்தியா வெளியேற்றியது. அத்துடன் நின்றுவிடாமல் 41 தூதரக அதிகாரிகளையும் தொடர்ச்சியாக கனடாவுக்கு திருப்பி அனுப்பியது. மோதல் உச்சக்கட்டமடைந்தது. இந்நிலையில், கனடாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாவை இந்திய தூதரகம் ரத்து செய்தது. இதனால் மிரண்ட கனடா சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்தது. மேலும் விசா வழங்குவதை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு இந்தியா இசைவு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் என்ட்ரி விசா, பிசினஸ் விசா, மெடிக்கல் விசா மற்றும் கான்பரன்ஸ் விசா உள்ளிட்டவற்றின் சேவைகள் தொடங்கப்பட்டது.