செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

இந்தியா செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி விளையாட்டு

ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா , வைஷாலி மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீ நாத் நாராயணன் ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டது. இன்று (24.09.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்ற செஸ் கிராண்ட் மாஸ்டர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர்க்கு ஊக்கத்தொகையாக ஆளுக்கு தலா ரூ.25 லட்சத்தை முதல்வர் மு. க .ஸ்டாலின் வழங்கினார்.இந்த வெற்றிகள் தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும், இவர்கள் எதிர்காலத்தில் மேலும் சாதனைகள் புரிய வேண்டும் என்றும் முதல்வர் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.விளையாட்டு துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அகில இந்திய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளை வழங்குவதோடு விளையாட்டிற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுவதில், அரசு ஆதரவு அளித்து வருவதாகவும். இதனால், தமிழ்நாடு,விளையாட்டு துறையில் முன்னணி மாநிலமாக உருவாகி, இந்தியா மற்றும் உலகளாவிய அளவில் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுகிறது என தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்ததாக நடைபெறவிருக்கும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு கூடுதல் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களும் உடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *