இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது; தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா இலங்கை உலகம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய 2 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர். இந்திய – இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறும். திருவிழாவில் இந்திய – இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் பங்கேற்ற்றுள்ளனர். கடலில் புயல், இயற்கைச் சீற்றம் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களின் வழிபாட்டிற்காக கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை 1913-ம் ஆண்டில் நிறுவினர். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் , ராமேசுவரம் பங்குத்தந்தை அசோக் வினோவிற்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகள், 36 பெண் குழந்தைகள் என மொத்தம் 3,464 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.கச்சத்தீவு திருவிழாவிற்கு ராமேசுவரத்திலிருந்து செல்வதற்கு 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில் செல்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு செல்பவர்களுக்கு படகு உரிமையாளர்கள் மூலம் பயண அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.நாளை அதிகாலை 6 மணியிலிருந்து ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் சுங்கத் துறையின் சோதனைக்கு பிறகு படகுகள் கச்சத்தீவிற்கு புறப்பட ஆரம்பிக்கும். மறுநாள் மார்ச் 15 சனிக்கிழமை திருவிழா முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு அனைத்து விசைப்படகுகளும் மாலை 5 மணிக்குள் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்தை வந்தடையும்.கச்சத்தீவில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அந்தோணியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி பூஜையும், இரவு அந்தோணியாரின் தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் 2-வது நாளான சனிக்கிழமை காலை 7 மணியளவில் திருப்பலி பூஜைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் நடைபெறும். கூட்டுப் பிரார்த்தனைக்கு பிறகு கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *