சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசு பாராட்டு.

ஆரோக்கியம் இந்தியா இயற்க்கை சித்தர்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம் வீட்டு வைத்தியம்

தமிழகத்தில் சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான பாராட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து, 8-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று சிறப்பாக கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் என்.ஜே.முத்துக்குமார், சித்த மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் என 1600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் காணொலிக் காட்சியின் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மூலிகை கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், நாட்டின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூலின் மூன்றாவது பாகம் (தமிழ்) மற்றும் எட்டாவது சித்த மருத்துவ தின விழா மலர் ஆகியவற்றை ஆயுஷ் துறைச் செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா, தமிழகம் சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி மாநிலமாக இருப்பதாக குறிப்பிட்டார். நாட்டில் 900-க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்துறை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.கிராமப்புறங்களில் 90 சதவீத மக்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 95 சதவீத மக்கள் ஆயுஷ் மருத்துவத்தைப் பற்றிய அறிவை கொண்டுள்ளனர். இதில் 50 சதவீதம் மக்கள் ஆயுஷ் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களைப் பெற 22 செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.காணொளி மூலம் கலந்து கொண்ட மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ முறைகள் அவசியமாக இருந்தன. தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *