உலகிலேயே அதிகளவு மனித ஆற்றல் கொண்ட நாடு இந்தியா. வருடந்தோறும் பொறியியல், கணிப்பொறி சார்ந்த பட்டப்படிப்புகள் என முடித்து வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்தியாவின் தலைசிறந்த கல்லூர்களான ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்றவைகளில் இருந்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பல மேற்கத்திய நாடுகளில் அதிக ஊதியத்தோடு பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
அப்படி தலைசிறந்த கல்லூரிகளில் படித்து பின்னர் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்ற பல இந்தியர்கள் அங்கு வேலை செய்யும் அல்லது வேலை செய்த நிறுவனங்களுக்கே பின்னாளில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். பல முன்னணி அமெரிக்க நிறுவனங்களுக்கு தொடர்ந்து இந்திய வம்சாவளி பட்டதாரிகளே தலைமைப் பொறுப்பிற்கு முன்னேறியுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்காவின் “ஸ்டார்பக்ஸ்” நிறுவனத்திற்கு இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பூனேவை சேர்ந்தவர். இதற்கு முன் பெப்சி மற்றும் டெட்டால் நிறுவனத்திலும் பணியாற்றியிருக்கிறார். இதே போன்று சுந்தர் பிச்சை கூகுல் நிறுவனத்திற்கும், சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கும், இந்திரா நூயி பெப்சிகோ நிறுவனத்திற்கும், பாராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்திற்கும் தலைமைப் பொறுப்பிற்கு தேர்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் தகவல் தொல்நுட்பத்துறையில் அதிகம் இந்தியர்களே மென்பொறியாளர்களாக இருக்கின்றனர். உலகளவில் இந்திய மென்பொறியாளர்களே அதிக நேரம் பணி செய்வதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.