இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனஅறிவிக்கப்பட்டுள்ளது .இந்தோனேசியா நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவது பாலி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களின் ஒன்றாக உள்ளது. இங்கு 1703 மீட்டர் உயரம் உள்ள இரட்டை சிகரம் கொண்ட லெவோடோபி லகி என்ற எரிமலை உள்ளது. நேற்று இரவு முதல் இந்த எரிமலை வெடித்து, நெருப்பு குழம்புகள் குமுறி வருகின்றன. மேலும் அப்பகுதியில் கரும் சாம்பல் சூழ்ந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் 8 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக, பாலி விமான நிலையத்திற்கு செல்லவிருந்த 7 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் தாமதமாகப்பட்டன. உள்ளூர் விமான நிலையத்திற்கு எரிமலை வெடிப்பால் எந்த வகை பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக விமான ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எரிமலை வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

