ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்பு பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் கல்வி பெறுவதற்கான ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால், புதிய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாகவும், விசா பெற்றவர்கள் அதை தவறான முறையில் பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளதால் ஆஸ்திரேலிய அரசு, மாணவர் விசா வழங்கும் செயல்முறைகளை கடுமையாக மாற்றி அமைத்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், குஜராத், பீஹார், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வருவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் 2023ம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களில் 48 சதவீதம் மட்டுமே ஏற்கப்பட்டது.தற்போது விசா பெறும் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களில் 20 சதவீதம் வரை ஏதாவது காரணம் கூறி நிராகரிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் உள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் முற்றிலும் ஏற்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
