தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராக உள்ளவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக சிறந்த நடன இயக்குனர் பிரிவில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒரு இளம்பெண் நடன கலைஞர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் ஒன்றை சைதராபாத் போலீசில் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் மற்றும் காயப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு எதிராக ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தலைமறைவான ஜானி மாஸ்டரை பெங்களூரில் கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத் கொண்டு சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த சூழ்நிலையில், தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க ஜாமின் கோரிய நிலையில் நடன இயக்குனர் ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் தேசிய விருது வழங்கும் நிகழ்வு நடக்கும் நிலையில், தற்போது ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.