கர்நாடகாவில் வரும் 11ம் தேதி முதல் கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் ஐந்து முக்கிய வாக்குறுதிகள் வெளியிட்டிருந்தது. இதர திட்டங்களுக்கும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா; ஆக.15 சுதந்திர தினம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் 15-ம் தேதி முதல் ஜூலை 15 வரை ரூ.2,000 ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். ரூ.2000 ஊக்கத் தொகை பெற விண்ணப்பத்துடன் வங்கி கணக்கு எண், ஆதார் எண் வழங்க வேண்டும். வரும் 11ம் தேதி முதல் கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஏசி மற்றும் சொகுசு பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். ஜுலை 1ஆம் தேதி முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக 10 கிலோ அரிசி வழங்கப்படும். ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்கள் சென்றடையும் என்றும் கூறினார்.
