சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை இன்று திறக்கப்பட்டது. கார்த்திகை 1 முதல் மண்டல பூஜை காலம் ஆரம்பமாகிறது. இது 41 நாட்கள் நீடிக்கும். மண்டல பூஜை முடிந்த பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும். இந்த காலத்தில், லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். மண்டல பூஜை காலத்தில், பக்தர்கள் பம்பை வரை வாகனங்களில் பயணம் செய்து, அங்கு இருந்து நீலிமலை வழியாக கால்நடையாக அய்யப்பன் சன்னிதானத்திற்கு செல்லுவர். மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் பெரும்பாலும் எரிமேலிக்கு வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். அங்கு அவர்கள் பேட்டை துள்ளி, அடர்ந்த காட்டுப் பகுதியாகிய பெருவழி பாதையில் நடைபயணம் செய்கிறார்கள். பேரூர்தி, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் ஆகிய இடங்களை கடந்து பம்பைக்கு சென்று, அங்கு இருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் அடைவார்கள். விரதத்தை ஆரம்பிக்கும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலை துளசி மாலை அணிந்து, தங்கள் அன்றாட வாழ்க்கையை மாற்றி, துறவு வாழ்க்கை போல வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கருப்பு, நீலம், காவி நிற ஆடைகளை அணிந்து, காலில் செருப்பு அணியாமல் இருப்பதுடன், தினமும் காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து சரணம் சொல்லி பூஜை செய்கிறார்கள். புனித மாலை அணிவதற்கான நிகழ்வு தொடங்கியுள்ள நிலையில். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய அய்யப்பன் கோவில்களில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அய்யப்பன் கோவில்களில் மாலை அணிவதுடன், மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி கட்டுவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

