கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது முதலே, கோயிலிலேயே தங்கியிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
இதனால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அரோகரா முழக்கம் எதிரொலிக்க பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைத்துள்ளனர். திருச்செந்தூரில் போர் புரிந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வே சூரசம்ஹாரம் என்று சொல்லப்படுகிறது. இது ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோயில் கடல் அருகே நடைபெறும்.
மாலை நடைபெற்ற சூரசம்ஹார விழாவுக்காக நாகை மாவட்டம் சிக்கலில் அன்னை பராசக்தியிடம் வாங்கிய வேலுடன், பாரம்பரிய இசை இசைக்க, கந்த சஷ்டி மண்டபத்தில் இருந்து திருச்செந்தூர் கடற்கரைக்கு ஜெயந்திநாதர் சப்பரத்தில் புறப்பட்டார். அவர் மயில் இறகு மாலை, கிராம்பு மாலை அணிந்திருந்தார். இதைத் தொடர்ந்து முருக பெருமான், முதலில் தாரகா சூரனை வதம் செய்தார்.
இரண்டாவதாக பானுகோபன், மூன்றாவதாக சிங்கமுகாசுரன், நான்காவதாக மாமரமாக வந்த சூரபத்மனை முருகர் தனது வேலால் தலையை துண்டித்தபோது ஒரு துண்டை மயிலாகவும் மறு துண்டை வேலாகவும் முருக பெருமான் ஆட்கொண்டார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்களும் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களும் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
சூரபத்மன் என்ற அரக்கன், சிவபெருமானின் தீவிர பக்தர், தனது தவ வலிமையால் சிவனிடம் ஒரு வரம் கேட்டான்.
அதாவது “எனக்கு இறப்பே வரக் கூடாது” என்றான். உடனே சிவனோ, பிறப்பு என இருந்தால் இறப்பு என இருக்குமே, சரி நீயே சொல் உன் இறப்பு எப்படியிருக்க வேண்டும்? என வினவினார்.
அப்போது சூரபத்மன், “பெண்ணின் வயிற்றில் இருந்து பிறக்கும் ஒரு மனிதரால் எனக்கு இறப்பே வரக் கூடாது, ஆண் மூலம் பிறக்கும் ஒருவர் மூலம் மட்டுமே என்ககு இறப்பு வர வேண்டும்” என வரம் கேட்டான். அதற்கு சிவனும் அப்படியே ஆகட்டும் என கொடுத்துவிட்டார்.
இதையடுத்து சூரபத்மனின் ஆட்டம் அதிகரித்தது. தனது சகோதரர்கள் சிங்கமுகன், தாராகாசுரன், பானுகோபன் ஆகியோருடன் இணைந்து தேவர்கள், முனிவர்களுக்கு சூரபத்மன் தொல்லை கொடுக்கத் தொடங்கினான்.
நாளுக்கு நாள் அவர்களது தொல்லை அதிகரித்ததால் சிவபெருமானிடம் போய் அனைவரும் முறையிடுகிறார்கள். அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகனை படைக்கிறார்.
இதையடுத்து சூரபத்மனை அழிக்க நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள தாய் பராசக்தியிடம் சக்திவேலை பெற்று சூரனை வதம் செய்த நிகழ்வுதான் இந்த சூரசம்ஹாரம். அதாவது மாமரமாக வரும் சூரனை பராசக்தியின் வேல், இரண்டாக பிளக்கிறது. அதில் ஒரு மரத்துண்டை மயிலாகவும், மறுத் துண்டை சேவலாகவும் முருகன் ஆட்கொள்கிறார். அதாவது எதிரிகளை கூட முருகன் ஆட்கொள்ளும் தெய்வாகமே இருக்கிறார் என்பதுதான் இந்த நிகழ்வு.

