மெரினா கடற்கரையில் பானி பூரி உணவு தொடர்பான ஆய்வினை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்க்கொண்டார்.
ஆய்வின் போது பானி பூரி, மசாலா, சாட் , மற்றும் உணவில் பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மருத்துவர் சதீஷ்குமார் கூறியதாவது,
இன்று கர்நாடகாவில் பானி பூரி சோதனை செய்ததில் கெமிக்கல் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசும் சோதனை செய்யமுடிவு செய்ததன் அடிப்படையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்விற்காக மாதிரிகள் எடுத்துள்ளோம்.
முடிவுகள் வெளிவர 3-4 தினங்கள் ஆகும், அதில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தும் பொருள்கள் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பானிபூரிகள் விற்கும் கடைகள் இருக்கும் இடங்களிலும் ஒரு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
வெறும் கைகளினால் பானி பூரி எடுத்து கொடுக்கும் இடங்களில் உட்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பானிபூரிகளில் பயன்படுத்தப்படும் நீர் மிகவும் நிறமாக இருப்பின் அதனை உட்கொள்ள வேண்டாம். இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தலைக்கு தொப்பியும் கைக்கு உறையும் அணிய வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி கரண்டி பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே தயாரித்து கடைகளில் வாங்கி வந்து சிலர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு பானிபூரிகள் தயாரிக்கும் கூடங்கள் குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டுள்ளோம். வரும் நாட்களில் அங்கும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.