சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் டைரக்ஷனில் அனிருத் இசையமைத்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. யூடியூபில் பீஸ்ட் டிரைலர் சாதனைகள் படைத்து வந்த அதே நேரத்தில் அதற்கான சோதனைகளும் ஆரம்பமாகியுள்ளன.
ஏப்ரல் 13ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் தீவிரவாதம் குறித்த காட்சிகள் உள்ளதால் இந்த திரைப்படத்தை வெளியிட மறுத்து குவைத் தணிக்கை துறை தடை செய்திருந்தது. இப்போது இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய முஸ்லிம்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என தவறாக சித்தரிப்பதாகவும், தாங்கள் நோன்பு நோற்று வரும் இந்த காலகட்டத்தில் இது போன்ற செயல்கள் தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், அதனால் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இது குறித்து இயக்குனரோ தயாரிப்பாளர்களோ இது வரையில் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.