நேபாள நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஜாஜர்கோட் பகுதியில் லாமிடண்டா எனுமிடத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அளவீடு மையம் தெரிவித்துள்ளது. நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல், நாட்டின் முப்படைகளும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
ஜாஜர்கோட்டுடன் தைலேக், சல்யான் மற்றும் ரோல்பா மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியத் தலைநகர் டெல்லி உள்பட நொய்டா, பாட்னா ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.