திருவண்ணாமலை, கோவை உள்பட அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 37 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூரில் உள்ள வேலுவின் வீடு, விருந்தினர் இல்லம், அவரின் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமானவரிசோதனையை தொடங்கியது.
20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 200க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டிவனம் சாலையில் உள்ள எ.வ.வேலுவின் மகன் கம்பனின் வீட்டிலும் இன்று அதிகாலை முதல் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
எ.வ வேலுவுக்கு நெருக்கமான தொழிலதிபராக கருதப்படும் பிரேம்நாத் என்பவருக்கு சொந்தமான சொகுசு விடுதி,அவரின் வீடு, மார்பல்ஸ் விற்பனை நிலையம் உள்ளிட்ட 3 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையை இரண்டாவது நாளாக நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கோவையில் காசா கிராண்ட் முன்னாள் நிர்வாகி செந்தில்குமாரின் இல்லம் உள்ளிட்ட 5 இடங்களிலும், கரூரில் 4 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.