சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்துகொண்டிருந்தது.
தற்போது, அந்த பகுதிகளிலும் போதிய விளைச்சல் இல்லாததால் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆயுத பூஜைக்கு முன்பு கிலோ 20 ரூபாயாக இருந்த வெங்காயம் நாள்தோறும் அதிகரித்து தற்போது 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் கிலோ 110 முதல் 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. தீபாவளி வரையில் இந்த விலை உயர்வு நீடிக்கும் எனவும், அதன் பின் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.