திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.7) மாலை நடைபெறவுள்ளது. சூரசம்ஹார விழாவை காண திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.கந்த சஷ்டி திருவிழா, முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும். சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த இடமாக சூரசம்ஹாரம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இது உலக அளவில் பிரசித்தி பெற்ற நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் மாதம் கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் சூரசம்ஹாரத்திற்காக எழுந்தருளுகிறார். அங்கு கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்துடன் வரும் சூரபத்மனை, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வதம் செய்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, ஆனந்த மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். பின்னர் கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயிலில் சேர்கிறார். அதன் பிறகு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும். தொடர்ந்து 7-ம் நாளான நாளை மறுநாள் (நவ.8) இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாள்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். மேலும், சூரசம்ஹார நிகழ்வையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் கம்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் முக்கிய பிரமுகர்கள் நிகழ்வை காண வசதியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் சுமார் 4500 போலீஸார்களை ஈடுபடுத்தியுள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடற்கரை மற்றும் பிற இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் சிரமமின்றி சூரசம்ஹாரத்தை காண முக்கிய இடங்களில் பெரிய எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

