ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதேபோல, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த 9க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ சீருடை அணிந்து வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, பிரதமரின் அறிவுரைப்படி, ஜம்மு காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இன்று இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நேற்று, பஹல்காமில், ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்தனர். இந்தத் தாக்குதலில் அப்பாவிகளின் உயிர்களை இழந்திருக்கிறோம். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளோம். தங்கள் விருப்பத்திற்குரியவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தச் செயலைச் செய்தவர்கள் மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் இருப்பவர்களும் அடையாளம் காணப்பட்டு, விரைவில் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை நான் நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஒருவரையும் விடமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

