இன்று இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 30ஆம் தேதி புயல் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். டெல்டா மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் இன்று இரவு முதல் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். தற்போது புயல் கடலில் நிலை கொண்டுள்ளது. இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும். நேற்று புயலின் வேகம் குறைந்து இருந்தது. ஆனால் தற்பொழுது அதிகரித்து வருகிறது. இந்தப் புயலானது புயலின் ஆரம்ப கட்டத்திற்கு சென்று வலுவிழந்து விடும்” என தெரிவித்தார்.