பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
2024 பாரா ஒலிம்பிக் தொடர் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் 12 விளையாட்டுப் போட்டிகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிளிங், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ் என 12 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தற்போது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துரையாடினர்.
2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் 50% வீரர், வீராங்கனைகள் முதல்முறையாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், வாழ்வின் தடைகளை தன்னம்பிக்கை மூலம் வெல்ல முடியும் என்பதை நிரூபிக்கவுள்ளனர்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 19 பதக்கங்களையும், ஆசிய பாரா ஒலிம்பிக்கில் 111 பதக்கங்களையும் இந்தியா வென்றிருந்தது. இம்முறை தங்கள் சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, வரலாறு படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மாண்டவியா குறிப்பிட்டார்.