அக்டோபர் 30ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளப் போவதாக தகவல்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒருநாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவில் பால் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபடுவதையும், பலர் சம்பிரதாயமாக கொண்டு உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள் என்பதால் அரசு சார்பில் இப்போதே விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பிவிடுக்கபட்டு இருந்தது இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்திற்கு வருகிற 30-ந்தேதி வரும் பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி முதன் முதலில் வர இருக்கிறார் என்பதால் அவருக்கு மிக பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாரதிய ஜனதா தலைவர்களும் தீவிர ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 30-ந்தேதி பிரதமர் மோடி வேறு என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் என்ற விவரங்கள் ஓரிரு நாளில் இறுதி செய்யப்பட்டு விடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *