கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழ்நாட்டையே உலுக்கியது.இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டது.இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன்(வயது 30), வசந்தகுமார்(32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். மேலும் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 376 D, 376 N ஆகிய பிரிவுகளின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

