இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். இந்திய கடல் சார் பல்கலைக்கழத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இன்று மாலை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் 6 மணிக்கு புறப்பட்டு 6.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து காரின் மூலம் சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் 9:30 மணி வரை ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு இந்திய கடல் சார் பல்கலைக்கழத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் ஒரு மணி நேரம் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து பகல் 12.00 மணிக்கு தனி விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி புறப்படுகிறார். இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் இன்று சென்னை வந்துள்ளதால் விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
ஜிஎஸ்டி சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகை வரை மற்றும் எம்.ஜி.ஆர் சாலை, கடல் சார் பல்கலைக்கழகம் வரையிலும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.