கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டாலும், ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டுப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அங்கேயிருந்து தென் மாவட்டங்களுக்கான அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வந்து செல்ல மாநகரப் பேருந்து சேவை மட்டுமே இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் சேவைகள் இல்லாததால் பயணிகள் பெரும் சிரமப்படுவதாகவும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் இல்லை எனவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பணிமனை கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்து வசதிகளும் கிளாம்பாக்கத்திற்கு வந்து சேரும் வரை கோயம்பேட்டிலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து வெளியூர் செல்ல தயாராகும் பயணிகள் பேருந்து எங்கிருந்து ஏறுவது என தெரியாமல் கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரின் இந்த புதிய அறிவிப்பால் பயணிகளுக்கு தற்போது ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.

