வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பில் 297 ரன்களை அடித்தது. இதில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தியுள்ளார். 111 ரன்களை 47 பந்துகளில் அடித்து அசத்தினார். இரு அணிகள் மத்தியில் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுடெல்லியில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, ஓப்பனர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். 2வது ஓவரில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து 4 போர்கள் அடித்து அசத்தினார், ஆனால் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிக்சர்களால் அட்டத்தை தொடங்கினார். இதனால் இந்திய அணி பவர் ப்ளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 82 ரன்களைச் சேர்த்தது, இது டி20 போட்டிகளில் பவர் ப்ளேவில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார், இது அவரது அதிவேக அரைசதமாகும். 10-வது ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு, ரிஷாத் ஹூசைன் வீசிய அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களை எடுத்தார். 10 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களைச் சேர்த்தது. அதில் சஞ்சு சாம்சன் சதம் குறிப்பிடத்தக்கது. முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய 14வது ஓவரில், சஞ்சு சாம்சன் 111 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து வெளியேறினார். 47 பந்துகளில் 8 சிக்சர்களை அடித்த சஞ்சு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது.இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக 22 சிக்ஸ் மற்றும் 25 பவுண்டரிகளை விளாசியுள்ளனர் மொத்தமாக 47 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது . இதுவரை ஒரு டி20 போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 43 பவுண்டரிகள் விளாசியதே சாதனையாக இருந்தது.இதன் மூலமாக இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது . வங்கதேச அணியின் பந்துவீச்சு தரப்பில், தன்ஜிப் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் தஸ்கின் அஹமது, முஸ்தஃபிசுர் ரஹ்மான், மஹ்மதுல்லா ஆகியோரும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். பிறகு களமிறகிய வங்கதேச அணி 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடினர். இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹித் ஹிருதாய் இணை மட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தன . 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புகளுக்கு வங்கதேச அணி 164 ரன்கள் எடுத்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இந்த தொடரை கைப்பற்றியது.