ஸ்கரப் டைபஸ் என்பது பாக்டீரியா மூலம் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இதற்கான சிகிச்சை, ரத்த நாளத்தின் மூலம் திரவ மருந்துகளை செலுத்துவதன் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியாவால் பாதிக்கப்படும் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் மனிதர்களை கடிக்கும்போது ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் மற்றும் உடல் அரிப்பு போன்ற முக்கிய அறிகுறிகள் காணப்படுகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த நோய் பரவலாக உள்ளது. விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வாழும் மக்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலம் ‘ஸ்கரப் டைபஸ்’ நோயைக் கண்டறிய முடியும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கி சிகிச்சை அளிக்க வேண்டும்.

