ஒருவரின் கையெழுத்திற்கு சமமாக, ஸ்மார்ட்போன் மெசேஜில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ்-அப்” எமோஜியும் செல்லுபடியாகும் என்ற வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது கனடா நீதிமன்றம். மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார். இதன் விளைவாக, ஒப்பந்தத்தை மீறிய குற்றத்திற்காக 61,442 டாலர் தொகையை செலுத்த வேண்டும் என விவசாயி ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாஸ்காசீவானில் உள்ள நீதிமன்றம் விசித்திரமான வழக்கு ஒன்றை சந்தித்தது. சவுத் வெஸ்ட் டெர்மினலில் வசித்து வரும் கெண்ட் மைக்கேல்போரோ, தானியங்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம், தங்கள் நிறுவனம் 12.73 அமெரிக்க டாலர் என்ற விலையில் 86 டன் ஆளி விதைகளை வாங்க உள்ளதாக தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இது சம்மந்தமாக தானியங்களை வாங்க விரும்பிய கெண்ட், விவசாயியான கிறிஸ் ஆச்சரை போனில் தொடர்பு கொண்டு, நவம்பர் மாதத்தில் தனக்கு ஆளி விதைகளை வழங்க வேண்டும் என்பதைக் கூறும் ஒப்பந்தத்தை புகைப்படமாக போனில் அனுப்பியிருந்தார். அதே மெசேஜில், இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யும்படி கிறிஸை வேண்டிக் கொண்டார் கெண்ட்.
விவசாயியான ஆச்சரும் அதற்கு பதிலளிக்கும் விதமாக கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ்-அப்” எமோஜியை அனுப்பியிருந்தார். இதற்கிடையில், ஆச்சரால் நவம்பர் மாதம் ஆளி விதைகளை அனுப்ப முடியவில்லை. அதன்பிறகு பயிர்களின் விலையும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே எந்த எமோஜியை புரிந்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டது. “நான் அனுப்பிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்ற அர்த்தத்தில் தான் “தம்ஸ்-அப்” எமோஜியை கிறிஸ் பயன்படுத்தினார்” என கெண்ட் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் தனக்கு வந்துவிட்டது என்பதை தெரிவிக்கும் நோக்கிலேயே அந்த எமோஜியை அனுப்பினேன் என ஆச்சர் கூறியுள்ளார். ஆனால் ஆச்சரின் பதிலை நீதிபதி ஏற்கவில்லை.
இந்நிலையில் Dictionary.com-ல் “தம்ஸ் அப்” எமோஜியின் அர்தத்தை தேடியுள்ளார் நீதிபதி கின். அதற்கு ஒருவரின் கருத்தை அங்கீகரிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அனுமதியளிக்கவும், ஆதரவளிக்கவும் இந்த எமோஜியை மெசேஜில் பயன்படுத்துகிறார்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த விளக்கங்கள் யாவும் அதிகாரப்பூர்வமானது இல்லையென்றாலும், தன் கருத்திற்கு இவை வலு சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
பல ஆண்டு காலமாக ஒருவரின் கையெழுத்தை கொண்டே நாம் அவரது அடையாளத்தை தெரிந்து கொள்கிறோம். ஒரு ஒப்பந்தம் செல்லுபடி ஆக வேண்டுமென்றால் இரு தரப்பும் அதில் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும். தற்போதைய நவீன காலத்தில் மொபைல் போனில் பயன்படுத்தக் கூடிய எமோஜிக்கள் கூட ஒப்பந்தத்தை உறுதி செய்ய முடியும்.
கையெழுத்திற்கு இணையாக எமோஜிகளும் கருதப்படும். கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ் அப்” எமோஜியை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு இணையானது என கூறுவதை வழக்கத்திற்கு மாறனதாக நீங்கள் அனைவரும் கருதலாம். ஆனால் கையெழுத்தின் இரண்டு முக்கியமான நோக்கத்தை இதுவும் நிறைவேற்றுகிறது. ஒன்று, இது யாருடைய கையெழுத்து எனும் அடையாளத்தை கூறுவது. இரண்டு, ஒப்பந்தத்தை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன் என்பதற்கான அத்தாட்சி. இந்த வழக்கில் கையெழுத்திட்டவரின் – அதாவது “தம்ஸ் அப்” எமோஜியை பயன்படுத்தியவரை அவரது போன் நம்பர் மூலம் அடையாளம் காண முடியும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
