மிகச் சாதாரணமான ஒரு வைரஸ் தொற்றாக தொடங்கிய கொரோனா, நம் வாழ்வின் இரு முழு வருடங்களை விழுங்கியுள்ளது. நாம் இது வரையில் வாழ்ந்து வந்திருந்த வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி தலைகீழாக்கிப் புரட்டிப் போட்டுள்ளது. பல இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பலரின் கனவுகளை சிதைத்துள்ளது. பலரை அன்றாட பிழைப்புக்கே அல்லாட வைத்துள்ளது. இப்படியாக ஏழைகளை மேலும் ஏழைகளாக மாற்றியுள்ள கொரோனா, செல்வந்தர்களுக்கு மட்டும் அவர்களின் சொத்து மதிப்பை பல மடங்கு அதிகரித்துக் கொடுத்துள்ளது. இது குறித்தான புள்ளி விவரங்கள் ஆக்ஸ்பேம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் நடுத்தர மக்களும் சிறு முதலாளிகளும் தங்கள் உடமைகளையும் சொத்துக்களையும் விற்று தங்கள் பிழைப்பை நடத்தி வரும் நிலைக்கு கொரோனா அவர்களை தள்ளியுள்ளது. தினக்கூலிகளும் ஏழைகளும் தங்கள் உணவுக்காகவே அரசாங்கத்தையும் தொண்டு நிறுவனங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது. ஆனாலும் கூட பெரு முதலாளிகளும் செல்வதர்களும் ஆடம்பர கார்களையும், சொகுசு பங்களாக்களையும் வாங்கிக் குவித்து வருவது ஒரு வித பொருளாதார சமன்பாடின்மையை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை.
“சமன்பாடில்லாத வைரஸ் தொற்று அறிக்கை” என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் சொத்துகள் 35% அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் 24 சதவிகித மக்கள் மாதம் ₹.3000 சம்பாதிக்கவே திணறி வரும் நிலையில் ஆசியாவின் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய்கள் வருமானம் ஈட்டி வருவதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை. அவரின் இந்த உபரி வளர்ச்சி கொண்டு 40 கோடி தினக்கூலிகள் ஐந்து மாதங்களுக்கு தங்கள் வாழ்வை நடத்துமளவுக்கான இலாபத்தை அவர் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முதல் 50 பணக்காரர்களாக அறியப்படுபவர்களில் வெறும் இரண்டு பேருக்கு மட்டுமே சொத்து மதிப்பு சுருங்கியுள்ளதாகவும், மற்ற அனைவரின் சொத்துகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும், இது கொண்டு உலகின் அனைவருக்குமே தடுப்பூசியை இலவசமாக அளித்திட முடியும் எனவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை.
பாதிப்புகள் இயற்கையோ செயற்கையோ, சேதங்கள் என்னவோ ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் தான். கொரோனாவும் இதையே உணர்த்துகிறது.
- சிறப்பு நிருபர்
NRI தமிழ்