தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கிறார். அதன்பின், செப்டம்பர் 2-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறார். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறார். “ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்திக்கிறார். செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.

