டி20 உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் அணி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பவுலிங் செய்ய முடிவெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 56 பந்துகளில் 80 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 41 பந்துகளில் 44 பந்துகளையும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 103 ரன்களை எடுத்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய ஒமர்சாய் 22 ரன்களுடன் வெளியேற, பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணி சார்பில் ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லாக்கி ஃபெர்கியூசன் 1 விக்கெட்டும் எடுத்தனர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. பின் ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, கான்வே, கேன் வில்லியம்சன், டேரல் மிட்சல் என அடுத்தடுத வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
க்ளென் பிலிப்ஸ் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் மட்டும் தான் 18, 12 என இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான், ஃபசல்ஹக் பாரூக்கி ஆகியோர் 4 விக்கெட்டுகளையும், முகமது நமி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். பலமுள்ள நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
