சுந்தர் பிச்சை வளர்ந்த சென்னை வீட்டை தமிழ் சினிமா தயாரிப்பாளர் மணிகண்டன் வாங்கியுள்ளார். இந்த வீடு அவரது கைகளுக்கு எப்படிச் சென்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது கூகுள். நாம் இணையத்தில் கிட்டதட்ட எது தேவை என்றாலும் முதலில் செல்வது கூகுள் தளத்திற்குத் தான். இந்த கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் சுந்தர் பிச்சை.
மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை பள்ளிப் படிப்பைப் படித்தது எல்லாம் சென்னையில் தான். அவர் ஐஐடிக்கு செல்லும் வரை அவர் சென்னை அசோக் நகரில் இருக்கும் வீட்டிலேயே வசித்து வந்தார்.
கடந்த வாரம் அசோக் நகரில் இருந்த சுந்தர் பிச்சையின் வீடு தமிழ் சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான சி.மணிகண்டனுக்கு விற்கப்பட்டது தான் பேசுபொருள் ஆனது. சுந்தர் பிச்சையின் தந்தை மணிகண்டனுக்கு வீட்டை விற்றிருந்தார். பத்திரப்பதிவு நடக்கும் முன்னர், சுந்தர் பிச்சையின் தந்தையே வீட்டைத் தனது சொந்த செலவில் இடித்தும் கொடுத்துள்ளார். சுந்தர் பிச்சையின் தந்தை வாங்கிய முதல் சொத்து என்பதால் இதன் பத்திரங்களைத் தரும் போது அவர் எமேஷ்னலாகி கண்கலங்கிவிட்டார்.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகமான தி பிரிண்டிற்கு மணிகண்டன் அளித்த பேட்டியில், சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்க முடிந்தது ஒரு “வரம்” என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 2ஆம் தேதியே இந்த வீடு மணிகண்டன் பெயருக்கு மாற்றப்பட்ட போதிலும் இது குறித்த தகவல்கள் கடந்த வாரம் தான் வெளியானது.
இது கூகுள் சி.இ.ஓ., வளர்ந்த இடம் என்று தெரியாமல், கடந்த 10 ஆண்டுகளாகத் தினமும் அந்த வீட்டைக் கடந்து வந்ததை நினைவு கூர்ந்த மணிகண்டன், நண்பர் ஒருவர் மூலமே இந்த வீடு விற்பனைக்கு உள்ளதை அறிந்து கொண்டதாகக் கூறுகிறார். அப்போது வீட்டின் உரிமையாளர் யார் என்றெல்லாம் அவரது நண்பர் கூறவில்லையாம்.
அவர் ரொம்பவே புகழ் பெற்ற ஒருவர் என்று மட்டும் கூறியுள்ளார். அப்போது உரிமையாளர் அரசியல்வாதியாக மட்டும் இருக்கக் கூடாது என்று மணிகண்டன் வேண்டிக் கொண்டாராம். அடையாறில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் தான் சுந்தர் பிச்சையின் தந்தை ஆர்.எஸ். பிச்சையை முதலில் மணிகண்டன் சந்தித்துள்ளார்.
இது குறித்து மணிகண்டன் மேலும் கூறுகையில், “அவர் முதல் சந்திப்பிலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு மணிநேரம் பொறுமையாக அனைத்து விவரங்களையும் அவர் விளக்கினார். அதன் பின்னர் என்னைப் பற்றியும் எனது பின்னணியைப் பற்றியும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து அப்போதே ஆவணத்தைக் கொடுத்து, அதைச் சரிபார்க்கும்படி கூறினார்.
அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.. இது அவர் வாங்கிய முதல் சொத்து. அது அவரது மகனுக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால், எனக்கு வந்துள்ளது. இப்போது சுந்தர் பிச்சையுடன் அவர்களின் பெற்றோர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். சொத்தை பார்த்துக் கொள்ள வந்து வந்து செல்வதில் சிரமம் இருப்பதாலேயே அவர்கள் வீட்டை விற்க முடிவு செய்துள்ளனர். சுந்தர் பிச்சையின் பாட்டி மட்டும் அங்கு வசித்து வந்தார், ஆனால் அவரும் சமீபத்தில் மறைந்த நிலையில், அதன் பிறகே இதை விற்க முடிவு செய்தனர்.
சுந்தர் பிச்சையின் பெற்றோர் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். அவரது தாய் எனக்கு பில்டர் காபி போட்டுக் கொடுத்தார். பத்திரப்பதிவு நாளன்று எங்களுக்கு முன்னால், 50-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர் நினைத்திருந்தால், தான் சுந்தர் பிச்சையின் தந்தை எனக் கூறி வரிசையைத் தவிர்த்திருக்க முடியும். இருப்பினும், அவர் பொறுமையாக வரிசையில் இருந்தே பத்திரப்பதிவை முடித்துக் கொடுத்தார்” என்று அவர் தெரிவித்தார்.