புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்த ஒன்றிய அரசு அதற்கான அடிக்கல்லை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நாட்டியது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் பணி டாடா ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு சாதனை கால அளவில் முடிக்கப்பட்டுள்ளது. ஈநிலையில் இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே புதிய நாடாளுமன்ற திறப்பு விழா பூஜையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக ஆதீனங்கள் அளித்த செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி உள்ளிட்டோர் வழிபட்டனர்.
பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல், பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்களிடம் வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் சார்பில் வழங்கப்பட்ட செங்கோலை நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.