தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த பதவிகளுக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். அடுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றனர்.
புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ் குமார், ஊர்க்காவல் படை டிஜிபி ரவி ஆகியோர் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, டெல்லி மாநகர காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களும் பரிந்துரையில் உள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், புதிய டிஜிபியாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.
இதே போல், தலைமைச் செயலாளர் பதவிக்கான பரிந்துரை பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர், 1986ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார். அடுத்தது, 1989ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் பெயரும் அடிப்படுகிறது. இவர் தற்போது வருவாய்த்துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.
மூன்றாவது, அதே 1989ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார். இதில், ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அக்டோபரிலும் ஓய்வு பெற உள்ளனர். எஸ்.கே.பிரபாகருக்கு மட்டும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பணிக்காலம் உள்ளது.
இவர்களில், சிவ்தாஸ் மீனாவே தமிழ்நாடு அரசின் அடுத்த தலைமைச் செயலராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெற்றவுடன் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷகில் அக்தர் அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

