ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1 மணியளவில், பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இந்நிகழ்வில், ராணுவ வீரர்கள் எந்த காயமின்றி தப்பித்தனர். இச்சம்பவத்திற்கு பின்னர், அப்பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் உள்ள இப்பகுதி, தீவிரவாதிகள் ஊடுருவும் வழக்கமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள தாஷ்பதான் எல்லைச் சாவடிக்கு அருகில் நேற்று காலை இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் ஒருவரை பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்ட முயன்றனர். ஆனால் அவர் இந்திய எல்லைக்குள் முன்னேறியதால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் எல்லைக் காவல் படையிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

