ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், தமிழ்நாடு அரசு முத்திரையும் தான். அடுத்தபடியாகத் தனது கமகமக்கும் சுவையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது பால்கோவா. மற்ற ஊர்களிலும் பால்கோவா கிடைக்கும் என்றாலும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த மவுசு தான் 2014ஆம் ஆண்டில் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்குப் புவிசார் குறியீடு பெற்றுத் தந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும், பால்கோவாவிற்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆண்டாள் திருமணமாகி மறுவீடு சென்ற போது சர்க்கரை சேர்த்த திரட்டுப் பாலை படைப்பார்கள். இந்த திரட்டு பால் பால்கோவாவுடன் ஒத்துப்போவதன் காரணமாகப் பால்கோவா தயாரிப்பு ஆண்டாள் காலத்திலேயே தொடங்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.