டெல்லியில் இன்று காலை மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்.

இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் வானிலை

டெல்லியில் காற்றின் தரம் கடந்த 20 நாட்களாக ஆபத்தான நிலைமையில் இருந்தது, ஆனால் நேற்று காற்று தரக் குறியீடு 301 ஆக மேம்பட்டது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு 313 ஆக பதிவாகியுள்ளதாக ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. காற்றின் தரம் ‘மிக மோசமான’ பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதிகளில் இன்று காலை மூடுபனி நிலவியது. டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில், கடுமையான பிரிவில் எந்த நிலையமும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.2 புள்ளிகள் குறைந்து 10.2 டிகிரி செல்சியசாக இருந்தது, மேலும் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு, குறிப்பாக சுவாசக் குறைபாடுகள் மற்றும் சரும நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். காற்றின் தரத்தை அளவிடுவதற்கான காற்று தரக் குறியீடு என்பது முக்கியமான அளவீடாகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால், காற்று நல்ல தரத்தில் உள்ளது எனக் கருதப்படுகிறது. 51 முதல் 100 வரை இருந்தால், காற்றின் தரம் திருப்திகரமாக இருக்கிறது. 101 முதல் 200 வரை மிதமான தரம், 201 முதல் 300 வரை மோசமான தரம், 301 முதல் 400 வரை மிக மோசமான தரம் என வகைப்படுத்தப்படுகிறது. 401 முதல் 450 வரை கடுமையான காற்று மாசு மற்றும் 450 மேல் இருந்தால், அது கடுமையான பிரிவுக்கு மேல் காற்று மாசடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *