சாலை போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி கர்நாடகாவில், என்.எஸ்.ரவிஷா என்ற ஒப்பந்ததாரர் கார் விபத்தில் உயிரிழந்தார். மாதம் 3 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதால், தங்களுக்கு 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். காரின் டயர் வெடித்ததாலேயே விபத்து நிகழ்ந்ததாக அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய காவல்துறை, தனது அறிக்கையில் முற்றிலும் மாறுபட்ட தகவலைத் தெரிவித்தது. போக்குவரத்து விதிகளை மீறி, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ரவிஷா காரை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்றும், கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம், குடும்பத்தினரின் இழப்பீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, ரவிஷாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, குடும்பத்தினரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஓட்டுநரின் தவறினால் ஏற்பட்ட இந்த விபத்தில், வேறு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் முக்கியமான சட்ட விளக்கத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. அதன்படி, ஓட்டுநர் ஒருவர் தனது சொந்த தவறால், அதாவது குற்றமாகக் கருதப்படும் வகையில் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டி விபத்தில் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுவது போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு இழப்பீடு கோர முடியாது என்றும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரின் தவறுக்கு, அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரத் தகுதியில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
