மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இச்சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அஜித்குமாரின் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 50 வெளிப்புற காயங்கள் காணப்படுகின்றன. 12 சிராய்ப்பு காயங்கள் உள்ளன, மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு காயங்கள்; ‘காயங்கள் வெறும் வெளிப்படையான காயங்கள் அல்ல; ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளன. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கிய அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. வயிறு நடுவே கம்பியால் குத்தப்பட்டுள்ளது. தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு; இது மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும். சிகரெட் சூட்டால் சித்தரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
