ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலந்துள்ளது என முன்னாள் ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் உருவாக்கியுள்ளது. இதற்குப் பிறகு, அரசால் மேம்படுத்தப்பட்ட இரண்டு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரிக்கப்பட்ட நான்கு லட்டுவின் நெய் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நான்கு லட்டின் நெய் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது உண்மை என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறினார். திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பக்தர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கான பரிகாரமாக, இன்று ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம் நடைபெறும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இன்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை சாந்தி யாகம் நடைபெற்றது.கோவிலின் தலைமை அர்ச்சகர் மற்றும் ஜீயர்கள் இதில் கலந்து கொண்டு சாந்தி யாகம் நடத்தினர். லட்டு தயாரிக்கும் அறையில் நாட்டு பசு மாட்டின் கோமியம் மூலம் தயாரிக்கப்பட்ட ஐந்து புனித பொருட்கள் மூலம் ஒட்டுமொத்த கோவில் வளாகமும் தூய்மைப்படுத்தப்பட்டது.தொடர்ந்து கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு கூடம், லட்டு விநியோக கவுண்டர் ஆகியவற்றில் நாட்டுப் பசுவின் ‘கோமியம்’ தெளிக்கப்பட்டு குங்கிலிய புகை காட்டப்பட்டது.