தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள். ஆண்டுக்கொரு முறை சுங்கக் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.33,881 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது.
தற்போது மத்திய அரசு எக்ஸ்பிரஸ் சாலை கட்டணமும் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி வரும் ஏப்.1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஆவணப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது. அமைச்சகம் அனுமதியளித்ததும் ஏப்.1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.