சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
சுற்றுலா தளமான பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். தற்போது வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் இரவு நேரங்களில் வாகனங்களில் வால்பாறை பகுதிகளில் சுற்றித் திரிவதால் வனவிலங்குகள் தாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாலை ஆறு மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் தங்கும் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், சாலைகளில் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவசர தேவைக்காக வரும் வால்பாறை, அட்டகட்டி, மற்றும் காடம்பாறை பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் மட்டும் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து செல்லலாம் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள கவர்க்கல் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் கோவில் மற்றும் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியது. ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை கவர்க்கல்பகுதியில் NEPC க்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் பகுதி உள்ளது.
நேற்று நள்ளிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் வன சின்னப்பன் , உஷா , கோபி , சந்திரிகா, கங்காதரன் மற்றும் சகுந்தலா ஆகியோரின் வீடுகளை இடித்து சமையல் உபகரணங்கள் மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்டவர்களை வெளியில் இழுத்துப் போட்டு சேதப்படுத்தியது.மேலும் அதே பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வளாகத்துக்குள் சென்ற காட்டு யானைகள், உண்டியல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது.இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியதால் கவர்கள் பகுதியில் பரபரப்பு நிலவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Problems Being Faced By The People Due To Frequent Attacks Of Wild … on