உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. கடைசி நேர கருத்துக் கணிப்புகளில் டொனால்டு ட்ரம்ப்பை, கமலா ஹாரிஸ் முந்தியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் உள்ள அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதைக் காண உலகமே ஆர்வமுடன் உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, அப்போதைய அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார்.
இந்நிலையில், ஜோ பைடனின் உடல்நிலையால், அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டதால், போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். இதையடுத்து, ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் பல்வேறு பிரபலங்களும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளிட்ட பல கோடீஸ்வர தொழிலதிபர்களும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்தனர். உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, ட்ரம்ப்பின் கையும் ஓங்கியது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க 18 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நாளன்று பணி நிமித்தமாகவும், வேறு காரணங்களுக்காகவும் வாக்களிக்க முடியாதவர்களுக்காக, முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி இருப்பதால், அதைப் பயன்படுத்தி 4 கோடியே 70 லட்சம் பேர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.