தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என ‘பெல்’ ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல் நீரிழப்பு, மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை முக்கியமாக பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளை வழங்கும். இதையடுத்து, மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் ‘வாட்டர் பெல்’ திட்டத்திற்கு 5 நிமிடம் ஒதுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், பள்ளியில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான சத்தத்திலிருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்படும். எனினும், பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து, நேரத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெல் அடித்தவுடன் வகுப்பறைகளில் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் வாட்டர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

