உலகளவில் பெருகி வரும் AI தொழில்நுட்பம் மனித உயிருக்கு ஆபத்து – எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் தலைவர் எரிக்

அரசியல் அழுகு குறிப்புக்கள் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள்

சில மாதங்களாக ChatGPT போன்ற AI கருவிகள் பிரபலமடைந்து வருகின்றன. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் பல முக்கிய நபர்கள் AI கருவிகளின் எழுச்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில், டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் தலைவருமான எலான் மஸ்க் ஒருபடி முன்னே சென்று, செயற்கை நுண்ணறிவை தொழில்நுட்பத்தை உருவாக்கும் டெவலப்பர்களை ஆறு மாதங்கள் வேலையை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனைக் கடிதம் வாயிலாக அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஒருபுறம் இப்படியிருக்க, இப்போது முன்னாள் கூகுள் தலைமை செயல் அலுவலர் எரிக் ஷ்மிட், செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தீய விளைவுகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது செயற்கை நுண்ணறிவு தற்கால அபாயத்தை முன்வைக்கிறது என்றும் அது பலரின் உயிரையும் பறிக்க வாய்ப்புள்ளது எனவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தீங்கு அல்லது மரணம் கூட ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் CEO கவுன்சிலில் பேசிய ஷ்மிட், AI அமைப்புகள் இணைய பாதுகாப்பில் புதிய பாதிப்புகளை கண்டறியும் அல்லது உயிரியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் குறித்து தான் கவலைப்படுவதாக பேசினார். “AI உடனான எனது அக்கறை உண்மையில் தற்காலச் சூழலைச் சார்ந்தது. இந்த அமைப்புகள் விரைவாக செயல்படக்கூடியது என்றாலும், சிறிது சிறிதாக மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும்,” என்று அவர் கூறினார்.
முக்கியமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஷ்மிட் எடுத்துரைத்தார். இதனை ஒரு ஆயுதமாகவோ அல்லது தீய நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆர்டிபிசியல்இண்டலிஜன்ஸ் குறித்த இந்தக் கவலைகள் எலான் மஸ்க், ஸ்டீவ் வோஸ்னியாக் உள்பட தொழில்நுட்பத் துறையில் உள்ள பல செல்வாக்குமிக்க நபர்களால் பேசப்பட்டு வருகிறது. AI மூலம் தவறான தகவல் பரவுதல் மற்றும் ஆட்டோமேஷனால் ஏற்படும் வேலை இழப்பு போன்ற பிரச்னைகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
2001 முதல் 2011 வரை கூகுளின் தலைமை நிர்வாக அலுவலராக இருந்து பின்னர் 2015 வரை செயல் தலைவராக பணியாற்றிய ஷ்மிட், தொழில்நுட்பம் குறித்து அதிக அறிவு பெற்றவர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவிற்கும் அவர் வழிகாட்டியாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *