இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாத நிலையில் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பஜ்ரங் புனியா, விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2 மாதங்களுக்கு பிறகும், தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், மல்யுத்த வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து பேசிய இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், ‘நமது மல்யுத்த வீரர்கள் இந்தியாவின் தெருக்களில் நீதிகோரி நிற்பதைப் பார்ப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் வாழ்க்கையில் கடினமாக உழைத்து நமது நாட்டிற்காக விருதுகளை வென்ற சக விளையாட்டு வீரர்களை இந்த நிலையில் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்தப் போராட்டம் குறித்து பேசிய சானியா மிர்சா, ‘ஒரு விளையாட்டு வீரராகவும், பெண்ணாகவும் இந்நிகழ்வுகளைப் பார்ப்பதற்கே கடினமாக உள்ளது. இவர்கள் எல்லோரும் நம் நாட்டுக்காக பெருமையை கொண்டுவந்த வீரர்கள். அவர்களின் வெற்றியை நாமும் கொண்டாடியிருக்கிறோம். அதனால், இக்கடினமான நேரத்திலும் அவர்களுடன் இருப்போம். உண்மை எதுவாக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இர்பான் பதான், ‘இந்திய விளையாட்டு வீரர்கள் மெடல் வாங்கும் நேரத்தில் மட்டுமின்றி எப்போதும் எல்லா நேரமும் நம் பெருமைக்கு உரியவர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.