
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் ஆரவாரத்துடன் மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ஒவ்வோரு அலங்காரம் மற்றும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செப்.2) காலை 6.30 மணிக்கு தொடங்கியது .
இதனை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் முதலில் விநாயகர் தேர், தேர் நிலையில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்தது.
தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானை எழுந்தருளிய பெரிய தேர், பின்னர் வள்ளி அம்மன் தனியாக எழுந்தருளிய தேர் புறப்பட்டு நான்கு ரதவீதிகளை சுற்றி வலம் வந்தன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

