ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. முதல்கட்ட சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அடுத்து மிகப்பெரிய அலைகள் தாக்கும் எனச் சொல்லப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமியை உருவாக்கியுள்ளது. 7.6 ரிக்டர் அளவில் வடக்கு ஜப்பான் குலுங்கியுள்ளது. இதனால் கட்டடங்கள் மிக வேகமாக ஆடியதால் மக்கள் அச்சமடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர். உடனே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
மேற்கு கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சற்றுமுன் இஷிகாவா, நீகாடா, டோயாமா ஆகிய கடலோரப் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. இதைவிட பெரிய சுனாமி அலைகள் வரக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடக்கு கடலோர பகுதிகளில் 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி தாக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

